செய்திகள்
பாம்பன் ரெயில் பாலத்தில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் சென்ற காட்சி.

பாம்பன் ரெயில் பாலத்தில் தடையை மீறும் சுற்றுலா பயணிகள்

Published On 2020-12-28 13:16 GMT   |   Update On 2020-12-28 13:16 GMT
பாம்பன் ரெயில் பாலத்தில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்பி எடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம்:

தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 9 மாதத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதாலும், விடுமுறையையொட்டி ராமேசுவரம் பகுதிக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.பாம்பன் ரோடு பாலத்தில் தற்போதுதான் சுற்றுலா பயணிகள் கூட்டத்துடன் பழைய நிலைமை திரும்பி உள்ளது. பாலத்தில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அதில் வந்த சுற்றுலா பயணிகள் ரோடு பாலத்தில் நின்றபடி ரெயில் பாலத்தையும் மற்றும் கடலின் அழகையும் பார்த்து ரசித்து பாலத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே உள்ள மண் பாதை வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனத்திலும் தடையை மீறி பாம்பன் ரெயில் பாலத்தின் நடுப்பகுதி வரை சென்றுவருகின்றனர்.

மேலும் ஆபத்தை அறியாமல் தடையை மீறி ரெயில் பாலத்தில் நடந்து சென்று தண்டவாளத்தில் அமர்ந்து நின்ற படி செல்பி எடுத்து விளையாடுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு ரெயில் பாலத்தில் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News