செய்திகள்
கைது

திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ தங்கம் கடத்திய ஏர் இந்தியா ஊழியர் கைது

Published On 2020-12-25 02:23 GMT   |   Update On 2020-12-25 02:23 GMT
திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் எந்த பயணியிடமும் தங்கம் சிக்கவில்லை. இதனால் விமானத்திற்கு உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள். அங்கும் தங்கம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் விமான நிலையத்திற்கு வெளியே, கடத்தல்காரர்களுக்கு கைமாற இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே வாகனம் நிறுத்தும் இடத்தில் மறைந்திருந்து அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஏர் இந்தியா விமான ஊழியர் கோபிநாத் (வயது 50) என்பவர், ஒரு பையுடன் வெளியே வந்தார்.

அங்கிருந்த 3 பேரிடம் அந்த பையை கொடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த விமான ஊழியரையும், அந்த 3 பேரையும் சுற்றி வளைத்தனர்.

பின்னர் விமான ஊழியர் கொடுத்த பையை வாங்கி சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 2½ கிலோ தங்கம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், விமான ஊழியரிடம், இந்த பையை கொடுத்த பயணி யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.

அவர் அந்த பயணி குறித்து கூறவே, விமான நிலையத்துக்கு வெளியே நின்ற அந்த பயணியையும் பிடித்தனர். பின்னர் விமான ஊழியர் கோபிநாத் உள்பட 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்து 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News