செய்திகள்
ஐந்தருவியில் உற்சாகமாக குளித்த சுற்றுலா பயணிகள்

தடை நீங்கிய முதல் நாளில் குற்றாலம் அருவிகளில் 4,723 பேர் குளித்தனர்

Published On 2020-12-16 09:17 GMT   |   Update On 2020-12-16 09:17 GMT
9 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
தென்காசி:

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (நேற்று) முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதாவது, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களும் ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அனைவருக்கும் அருவிக்கரை நுழைவு பாதையில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கைகழுவும் திரவம் வழங்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் தனித்தனியாக வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் 10 பேர் வரை அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

9 மாதங்களுக்கு பிறகு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அங்குள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது சீசன் காலம் இல்லாவிட்டாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சுமாராக விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று ஒரே நாளில் குற்றாலம் மெயினருவியில் 2,185 பேர், ஐந்தருவியில் 1,068 பேர், பழையகுற்றாலம் பகுதியில் 709 பேர், புலியருவியில் 680 பேர் என மொத்தம் 4,723 பேர் குளித்தனர். அவர்களுக்கு 10 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் சமீரன் அருவியை பார்வையிட கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக நேரம் நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News