செய்திகள்
கோப்பு படம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பள்ளி செயலாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Published On 2020-12-04 22:33 GMT   |   Update On 2020-12-04 22:33 GMT
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளிக் கூட செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி:

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் காயிதே மில்லத் என்ற பெயரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் செயலாளராக தென்னூர் ஹைதர் நகரை சேர்ந்த முகமது சலீம் என்கிற சலீம் (வயது 57) இருந்து வருகிறார். கடந்த 5.9.2019 அன்று, பள்ளியில் விழா ஒன்று நடந்தது. அப்போது அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த 7 வயது சிறுமியை பள்ளி செயலாளரான முகமது சலீம், மடியில் தூக்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

மேலும், இதை வெளியே சொன்னால் நடப்பதே வேறு என்று அச்சிறுமியை முகமது சலீம் மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக அச்சிறுமி, தனது தாயாரிடம் சொல்லி அழுதாள். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். அதன்பேரில், முகமது சலீம் மீது, மிரட்டல் விடுத்தல் மற்றும் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி வனிதா முன்னிலையில் நேற்று நடந்தது. இறுதியில் விசாரணை முடிக்கப்பட்டு, பள்ளி செயலாளர் முகமது சலீமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.
Tags:    

Similar News