செய்திகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் காணலாம்.

ஆற்காடு அருகே விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-12-01 03:16 GMT   |   Update On 2020-12-01 03:16 GMT
ஆற்காடு அருகே விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மாம்பாக்கம் அருகே உள்ள அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 75), விவசாயி. இவர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தனது வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து தூற்றிக் கொண்டிருந்தார். இதற்கு முனிரத்தினத்தின் பேரன் முருகன் என்பவரும் துணையாக இருந்தார். அப்போது காற்றில் பறந்து வந்த தூசி, அருகில் இருந்த ராஜி (28) என்பவரின் மீதும், அங்கிருந்த குடிதண்ணீரிலும் விழுந்துள்ளது. இதனை ராஜி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ராஜிக்கும், முனிரத்தினம் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜி முனிரத்தினத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து முனிரத்தினம் அக்கூரில் உள்ள கொடிவழி அருகே படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மாம்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அக்கூர் பகுதியை சேர்ந்த ராஜி, சோமு (45), பாபு (37) மற்றொரு பாபு (36), ஆகிய 4 பேரும் சேர்ந்து முனிரத்தினத்தை கற்களால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் அமர்வு நீதிபதி சீனிவாசன் இந்த வழக்கை விசாரித்து 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆஜரானார்.
Tags:    

Similar News