செய்திகள்
சுரேந்தர்

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Published On 2020-11-30 12:22 GMT   |   Update On 2020-11-30 12:22 GMT
ஆற்காடு அருகே புயல் காரணமாக அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.
ஆற்காடு:

காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 7). ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து கிடந்தன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

அதேபோல் வரகூர் பகுதியிலும் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அப்பகுதி சிறுவர்கள் அந்தப்பகுதியில்தேங்கியுள்ள மழைநீரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேந்தர் மிதித்து உள்ளான். இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உறவினர்கள் மறுத்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து சிறுவனின் உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புயல் மழை காரணமாக 2 நாட்களுக்கு முன்பே அறுந்து கிடந்த மின்கம்பியை மின் ஊழியர்கள் கவனிக்காமல் விட்டதால் தான் சிறுவன் உயிரிழந்ததாகவும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News