செய்திகள்
ரித்திக்

வாணியம்பாடி, அமிர்தியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உள்பட 2 பேர் பலி

Published On 2020-11-28 11:51 GMT   |   Update On 2020-11-28 11:51 GMT
வாணியம்பாடி மற்றும் அமிர்தியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரித்திக் (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வநதான். இந்நிலையில் சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் உதயேந்திரம் கல்லறை தெரு அருகே உள்ள பாலாற்றில் குளித்து விளையாடுவதற்காக சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதனால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

இதை பார்த்து, உடன் வந்த சிறுவர்கள் கூச்சலிடவே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே உள்ள அமிர்தியில் இருந்து நம்மியம்பட்டு செல்லும் வழியில் உள்ள நாடானூர் மலை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கணியம்பாடி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அமிர்தி சிறுவன உயிரின பூங்கா அருகே உள்ள தரைப்பாலத்தில், வெள்ளம் கரை புரண்டு ஓடும் பகுதியில், வாலிபர் மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்த சமையல் எண்ணெய் பாட்டில் ஆற்றில் விழுந்துள்ளது.

அதனை எடுக்க அவர் முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை பூங்கா நுழைவாயில் அருகே உள்ள மற்றொரு தரைப்பாலத்தில் அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News