செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் சாலை சீரமைப்பிற்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற ஒப்புதல்- தமிழக அரசு உத்தரவு

Published On 2020-11-17 01:10 GMT   |   Update On 2020-11-17 01:10 GMT
நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மீண்டும் சீரமைப்பதற்கு கூடுதலாக ஆயிரம் கோடி கடன் பெறுவதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளது.
சென்னை:

நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. தமிழகத்தில் அனைத்து நகரங்களையும் இணைக்கும் சாலைகளை பராமரிப்பது அவசியமாகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 35 குடிநீர் திட்டங்கள், 23 பாதாள சாக்கடை திட்டங்கள் அம்ருத், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்கள், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கீழ் பெற்ற கடன்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளின் சில பகுதிகள் மட்டுமே அந்தந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கப்படும். ஆனால், முழுமையாக அந்த சாலையை பழைய நிலைக்கு கொண்டுவர அந்த திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்படுவதில்லை.

எனவே அதுபோன்ற சாலைகளை சீரமைப்பது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மிகுந்த நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் 4 ஆயிரத்து 376 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 11 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் இன்னும் சீரமைக்க வேண்டியதுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நகராட்சி நிர்வாக ஆணையரகம் பெற்றுள்ளது என்று அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பினால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்காக அதிக நிதி செலவழிக்கப்பட்டு உள்ளது.

எனவே சாலைகளை சீரமைக்க கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். அதன்படி முதல்கட்ட பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை அரசு மானியம் அல்லது வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (டுபிட்கோ) மூலம் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. இந்த கடன் தொகையை அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே திரும்ப செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News