செய்திகள்
கோப்புபடம்

கோவையில் தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - 3 பேர் மீது வழக்கு

Published On 2020-11-13 06:13 GMT   |   Update On 2020-11-13 06:13 GMT
கோவையில் உள்ள தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை:

லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடகோவை மேம்பாலம் அருகே தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று பகல் 11 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர்.பின்னர் அவர்கள் அலுவலக பிரதான நுழைவு வாயிலை பூட்டினர். மேலும் அங்கிருந்த தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையாக சென்று டேபிள், கழிப்பறை, அலுவலக கோப்புகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

சோதனையின் போது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. மேலும் ரூ.5 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருந்த போது, இணை இயக்குனர் அறைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் இடைத்தரகர் போல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவரது பெயர் பனையப்பன் என்பதும் தெரியவந்தது. இதுதவிர துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இணை இயக்குனர் வேணுகோபால், துணை இயக்குனர் சாந்தினி பிரியா, இடைத்தரகர் பனையப்பன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இடைத்தரகர் பனையப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News