search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு போலீஸ்"

    • லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக 2 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன.

    அப்போது அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுவதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளன.

    யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த அதிபர் ஒருவரின் வீட்டில் அப்போது சோதனை நடத்தப்பட்டு யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு முதல் கட்ட விசாரணை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள னர். 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

    குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் கட்டுமான அதிபர்களான உதயகுமார், சுனில், கெத்பாலியா, மணீஸ் ஆகிய 3 பேரின் வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பின்னிமில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கிய போது ஆக்கிரப்பாளர்களை காலி செய்வதற்காகவே ரூ.50 கோடி லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்பது பற்றிய பட்டியலையும் இணைத்து உள்ளனர்.

    இதன் படி முன்னாள் எம்.பி. ஒருவர் ரூ.23 லட்சம் லஞ்சமாக பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு எம்.பி.க்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.33 லட்சமும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கு ரூ.2 லட்சமும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.40 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி என யார்-யாருக்கு எந்தெந்த வழிகளில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி லஞ்சப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
    • முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

    மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    • 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

    இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

    இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    28 வகையான பொருட்கள் எவை?

    1.பட்டுப்புடவைகள்-11,344

    2.குளிர்சாதன எந்திரங்கள்-44

    3.தொலைபேசிகள்-33

    4.சூட்கேசுகள்-131

    5.கைக்கெடிகாரங்கள்-91

    6.சுவர்கெடிகாரங்கள்-27

    7.மின்விசிறிகள்-86

    8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

    9.டீப்பாய்கள்-34

    10.மேஜைகள்-31

    11.மெத்தைகள்-24

    12.உடை அலங்கார டேபிள்கள்-9

    13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

    14.ஷோபா ஷெட்டுகள்-20

    15.செருப்புகள்-750 ஜோடிகள்

    16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

    17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

    18.இரும்பு பெட்டகங்கள்-3

    19.சால்வைகள்-250

    20.குளிர்பதன பெட்டிகள்-12

    21.டி.விக்கள்-10

    22.வி.சி.ஆர்.கள்-8

    23.வீடியோ கேமரா-1

    24.சி.டி.பிளேயர்கள்-4

    25.ஆடியோ பிளேயர்கள்- 2

    26. ரேடியோ பெட்டிகள்-24

    27.வீடியோ கேசட்டுகள்-1,040

    28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

    • பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
    • ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இங்குள்ள பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று இரவு அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    நீர்வள துறையின்கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளராக உள்ள பாஸ்கரன் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் அவரது அறையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் எண்ணி பார்த்தபோது அதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 பணம் இருந்தது தெரியவந்தது.

    அந்த பணத்துக்கு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் போலீசார் கணக்கு கேட்டனர். ஆனால் அவர் உரிய கணக்கு காட்டாததால் ரூ.2¼ லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்து கொடுப்பதற்காக அவர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்ச பணமாக இது இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழிலகம் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் எழிலகம் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    • கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
    • முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தருமபுரி:

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

    • எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலின் பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடமே பொதுப்பணித்துறையும் இருந்தது. அவரது ஒப்புதலின் பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின்படியே கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த விதிகளுக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் வழங்கி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு துறை அமைச்சர் என்ற பெயரிலும், முதலமைச்சர் என்ற வகையிலும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இது முறைகேடான நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரி இருந்தனர். அதனை ஆய்வு செய்த தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர். இதன் பிறகு வழக்கு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    ×