செய்திகள்
மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியது- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-28 08:35 GMT   |   Update On 2020-10-28 08:35 GMT
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன் 1ல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் பரவி வட மாநிலங்களில் கொட்டியது. மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ ஆகும். ஆனால், இந்தாண்டு மழை அளவு சராசரியை ஒட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும், ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News