செய்திகள்
கைது

தூத்துக்குடியில் ரவுடி கொலையில் 3 பேர் கைது

Published On 2020-10-22 07:47 GMT   |   Update On 2020-10-22 07:47 GMT
தூத்துக்குடியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி:

தூத்துக்குடி என்.ஜி.ஓ. காலனி கணேஷ்நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கதிரேசன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் திசையன்விளை போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது. இதுதவிர பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் வழக்கும் உள்ளது. ரவுடியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் கதிரேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கதிரேசன் ஆதரவாளர்களுக்கும், முத்தையாபுரத்தை சேர்ந்த சுந்தரராஜ் (28) என்பவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த ஆகஸ்டு மாதம் ஆறுமுகநேரியில் போஸ்டர் ஒட்டுவதில் தகராறு ஏற்பட்டது.

அப்போது கதிரேசன் ஆதரவாளரான ராஜேஷ் என்பவர் கையில் சுந்தரராஜ் அரிவாளால் வெட்டினார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கதிரேசன், சுந்தரராஜ் ஆகிய 2 பேரும் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்தனர். இதற்கிடையே, கதிரேசனுக்கு தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணின் மகன் பவித்ரன் என்பவர் மூலம் கதிரேசனை தனியாக அழைத்து வந்து கொலை செய்ய சுந்தரராஜ் சதித்திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரராஜ் வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது பவித்ரன், கதிரேசனை மது குடிப்பதற்காக மீளவிட்டான் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து பவித்ரன், சுந்தரராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் தனது ஆதரவாளர்களான தாமோதரநகரை சேர்ந்த நவீன் (20), சண்முகபுரத்தை சேர்ந்த மரியசெல்வசதீஷ் (22), முத்துக்குமார் (19), நத்தகுளத்தை சேர்ந்த ரமேஷ் (31) உள்பட 5 பேரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பினார். அங்கு குடிபோதையில் இருந்த கதிரேசனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சுந்தரராஜ், நவீன், முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News