செய்திகள்
புழல் ஏரி

புழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு

Published On 2020-10-22 02:42 GMT   |   Update On 2020-10-22 02:42 GMT
சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் புழல் ஏரி, சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஏரிகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து உள்ளது.

இதில் புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 27 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 22 மில்லி மீட்டரும், தாமரைப்பாக்கத்தில் 19 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு 587 கன அடி வீதம் வருகிறது. இதுதவிர புழல் ஏரிக்கு 160 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 480 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது.

அதேநேரம் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 625 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 113 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 68 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளின் தற்போதைய மொத்த இருப்பு 5 ஆயிரத்து 266 மில்லியன் கன அடி (5.2 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் மேலும் ஏரிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 1,760 கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News