செய்திகள்
துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி பேசியபோது எடுத்த படம்.

பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்தால் மரண தண்டனை நிச்சயம்- துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி பேச்சு

Published On 2020-10-05 07:22 GMT   |   Update On 2020-10-05 07:22 GMT
18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்தால் மரண தண்டனை நிச்சயம் என திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி எச்சரித்தார்.
திருக்கோவிலூர்:

18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், அதற்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கும் என்ற எச்சரிக்கையை பொதுமக்கள் குறிப்பாக குற்ற சிந்தனை உடையவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார நிகழ்ச்சி திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்றது.

இதற்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி தலைமை தாங்கி பேசியதாவது:-

18 வயதிற்குட்பட்ட பெண் அல்லது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஏற்கனவே 10 வருட சிறை, ஆயுள்தண்டனை அல்லது 20 வருட சிறைதண்டனை என தீர்ப்பு இருந்த நிலையில் தற்போது அந்த சட்டத்தில் மாற்றம் செய்து மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை குற்ற சிந்தனை உடையவர்கள் உணர்ந்து இனியாவது திருந்தவேண்டும். தவறும் பட்சத்தில் மரண தண்டனை கிடைக்கும் என்பது உறுதி.

மேலும் பாலியல் ரீதியான புகார்கள் குறித்து இதுவரை ரத்த சம்பந்தமானவர்கள் மட்டுமே கொடுக்கவேண்டும் என்ற நிலையையும் மாற்றி யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் உண்மையானதாக இருக்கவேண்டும் என்றும், இது தொடர்பான புகார்களை 1098 என்ற இலவச உதவி எண் முலமாகவோ அல்லது நேரிலோ, தொலைபேசி வழியாகவோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News