செய்திகள்
மழை

சேலம் ஏற்காட்டில் கனமழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2020-10-01 13:48 GMT   |   Update On 2020-10-01 13:48 GMT
சேலம் ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஏற்காடு, காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

சேலம் குகை, பச்சப்பட்டி, மணக்காடு ராஜ கணபதிநகர், களரம்பட்டி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீர், மழைநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடியது. அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஏற்காட்டில் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைகளில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளும் அங்கு நிலவிய இதமான சூழ்நிலையை கண்டுகளித்தனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஏற்காடு-47.6, காடையாம்பட்டி-41, தம்மம்பட்டி- 10, ஆணைமடுவு-14, கரியகோவில்-25, சேலம்-12.6, வாழப்பாடி-5, ஆத்தூர்-10.6, ஓமலூர்- 31.4, பெத்தநாயக்கன்பாளையம்-40, மேட்டூர்- 38.6, எடப்பாடி-9.2, கெங்கவல்லி-15, வீரகனூர்-13, சங்ககிரி- 15.2.
Tags:    

Similar News