செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் சரக்கு வேனை படத்தில் காணலாம்.

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 7 பேர் கைது

Published On 2020-09-26 09:19 GMT   |   Update On 2020-09-26 09:19 GMT
அய்யலூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:

ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக மர்மகும்பல் ஒன்று கஞ்சாவை கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை பிரிவு போலீசார் மற்றும் வடமதுரை போலீசார் அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வேனில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை சோதனையிட்டனர். அப்போது வேனில் 300 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சரக்கு வேனில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 28), சீலப்பாடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோனைமுத்து (31), கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த பரணி (33), என்.பாறைபட்டியை சேர்ந்த யுவராஜ் (33), ஜெய்சங்கர் (24), திருநகரை சேர்ந்த ராகவன் (27), பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த பாண்டியப்பன் (52) என்பதும், கஞ்சா மூட்டைகளை ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News