செய்திகள்
மழை

மதுரை மாவட்டத்தை குளிர்வித்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-09-26 06:44 GMT   |   Update On 2020-09-26 06:44 GMT
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் இரவு வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருந்தது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மாலை நேரம் மழை பெய்தது. அதன் பிறகு வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் நேற்று மதுரையில் பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அலங்காநல்லூர், அழகர் கோவில், ஒத்தக்கடை, கடச்சனேந்தல், காதக்கிணறு, கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள நல்லு தேவன்பட்டி, கரையான் பட்டி, போத்தம்பட்டி, கணவாய்பட்டி, வலையபட்டி, மாதரை, வில்லாளி பெருமாள்பட்டி, நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கனூர், செல்லம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் இரவு வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருந்தது.

இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு பாசன திட்டத்தில் இருபோக சாகுபடி பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதேபோல் ஒருபோக சாகுபடி பகுதிகளான மேலூர் வட்டத்திலும், திருமங்கலம் பிரதான கால்வாயிலும் நாளை (27-ந்தேதி) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தற்போது பெய்துவரும் மழை உழவு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News