செய்திகள்
கைது

வேலூர் இப்ராகீமுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2020-09-22 08:16 GMT   |   Update On 2020-09-22 08:16 GMT
திருப்பூரில் பாரதிய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் வேலூர் இப்ராகீமுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனத்தவைராக உள்ளவர் வேலூர் இப்ராகீம். இவர் மத்திய பா.ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் மோடி அரசின் சாதனைகளை குறித்து பிரசாரம் செய்தார். பின்னர் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறீர்கள். இது உங்களுக்கு நல்லதல்ல. தொடர்ந்து பா.ஜனதாவை ஆதரித்து பேசினால் நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

இதனையடுத்து வேலூர் இப்ராகீம் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து மர்ம செல்போன் எண் குறித்து விசாரணை நடத்தினார். அது தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவடை பெரிய தெருவை சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மகன் முகமது பாசித் (வயது 28) என்பவரது செல்போன் எண் என்று தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடிவந்தனர். முகமது பாசித் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலூர் இப்ராகீமுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர் குவைத், அவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து முகமது பாசித்தை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் இப்ராகீம் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரசாரம் செய்தார்.
Tags:    

Similar News