செய்திகள்
கைது

கீழ்பென்னாத்தூர் அருகே போலி டாக்டர் கைது

Published On 2020-09-19 08:15 GMT   |   Update On 2020-09-19 08:15 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே போலி டாக்டர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா கண்காணிப்பு அலுவலரும், நலப்பணிகள் இணை இயக்குனருமான என்.வசந்தகுமார் தலைமையிலான குழுவினருக்கு, கீழ்பென்னாத்தூர் பகுதியில் சில போலி டாக்டர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ வீதியை சேர்ந்த பி.அன்பழகன் என்பவர் டாக்டருக்கு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக கையும், களவுமாக பிடித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர்.

மேலும் கீழ்பென்னாத்தூர்- திருவண்ணாமலை ரோட்டில் மருந்து கடை நடத்திவரும் ஜீவாராம் (வயது 32) என்பவர் மருந்து கடையிலேயே மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அங்கு சென்றதும், ஜீவாராம் கடையை விட்டு உடனடியாக வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்தும் இணை இயக்குனர் வசந்தகுமார் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசு, ரவிச்சந்திரன் ஆகியோர் 2 புகார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் அன்பழகனை கைது செய்தனர். தப்பியோடி தலைமறைவான ஜீவாராம் என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News