செய்திகள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்.

ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் மரணம்

Published On 2020-09-18 01:48 GMT   |   Update On 2020-09-18 01:48 GMT
ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செஞ்சி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 49). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (23). திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் பட்ட படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தன்னுடைய தாத்தா ரோஸ்செட்டி (70)யுடன் கிராம எல்லையில் உள்ள வயலுக்கு சென்றார்.

நீண்ட நேரமாக அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நிறுவனத்தில் வேலைக்கு சென்ற ஏகாம்பரம் இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். மகன் விக்னேஷ், தந்தை ரோஸ்செட்டி எங்கே என்று அவர் கேட்டதற்கு வீட்டில் இருந்தவர்கள் வயலுக்கு சென்றுள்ளனர் என்றனர்.

உடனடியாக ஏகாம்பரம் வயலுக்கு சென்று பார்த்தார். அங்குள்ள தரை கிணற்றில் விக்னேஷ், ரோஸ்செட்டி ஆகியோர் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். இதை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்து அவர்கள் இருவரது உடல்களை வெளியே எடுத்தனர். அவர்கள் இருவரது உடல்களிலும் மின்சாரம் தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. அவர்கள் இருவரும் மின் மோட்டார் இருக்கும் இடத்தில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் செஞ்சி அகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News