செய்திகள்
கொரோனா வைரஸ்

10-வது முறையாக இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

Published On 2020-08-22 18:46 GMT   |   Update On 2020-08-22 18:46 GMT
10-வது முறையாக இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை:

கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ஊரடங்கு. ஊரடங்கு அமல்படுத்துவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் கடந்த 2, 9, 16-ந்தேதி ஆகிய 9 முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை.

பத்திரிகைகள், ஊடகங்களுக்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வர அனுமதி உண்டு. அதனை போலீசார் கண்காணித்து சரியான காரணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்றைய தினம் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News