செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன்?- துணைவேந்தர் சூரப்பா பதில்

Published On 2020-08-19 02:16 GMT   |   Update On 2020-08-19 02:16 GMT
செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன் என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, செமஸ்டர் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் தேர்வு கட்டணத்தை செலுத்தாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடைபெறாத தேர்வுகளுக்கு எதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்? என்றும் மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது, சான்றிதழ்கள் அச்சடிப்பது என்று இதர பணிகளுக்கான செலவுகள் இருப்பதால் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் வசூல் செய்வதில், பல்கலைக்கழகம் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறது’ என்றார்.
Tags:    

Similar News