செய்திகள்
முக ஸ்டாலின்

இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: முக ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

Published On 2020-08-14 13:44 GMT   |   Update On 2020-08-14 13:44 GMT
இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் முறை தமிழ்நாட்டில் உள்ளது. இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்து இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்.

எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன்.

அதே நேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்!.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News