செய்திகள்
குப்பையில் உணவு தேடும் குதிரைகள்

கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து: குப்பையில் உணவு தேடும் குதிரைகள்

Published On 2020-08-14 11:15 GMT   |   Update On 2020-08-14 11:15 GMT
கொரோனா பாதிப்பால் விழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் குதிரை வளர்ப்போர் சிலர் குதிரைகளுக்கு உணவிட முடியாமல் அவற்றை சாலைகளில் விட்டுள்ளனர்.
ஆரப்பாளையம்:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை நகரின் முக்கிய அடையாளமாக குதிரை வண்டிகள் இருந்தன. மதுரை நகரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு குதிரை வண்டி சவாரி ஒரு காலத்தில் சிறப்பான பொழுதுபோக்காக இருந்தது. கால சூழ்நிலை மாற்றத்தால், குதிரை வண்டிக்காரர்கள் பலர் குதிரைகளை விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறினர். ஆனால், வெகு சிலர் அந்த குதிரைகளை பிரிய மனமில்லாமல் அந்த குதிரைகளை திருமண விழாக்களில் சாரட் வண்டிகளில் மணமக்கள் பவனி, கோவில் விழாக்களில் தேர் பவனி என்று வாடகைக்கு விட்டு பயன்படுத்தி வந்தனர். இந்த தொழிலில் அதிக அளவு விசேஷ மாதங்கள் உள்ள காலகட்டத்தில் தான் நன்றாக நடக்கும். ஓரளவு வருமானமும் கிடைக்கும். மற்ற காலங்களில் குதிரை வளர்ப்போரும், குதிரையும் உணவுக்கே போராடும் நிலைமை தான் இருக்கும். இதுதான் இந்த தொழிலின் நிலைமையாக இதுவரை இருக்கிறது.

இந்த நிலையில்,கொரோனா பாதிப்பு மனிதர்களை முடக்கியதை விட ஒருபடி மேலாக குதிரைகளை உணவின்றி முடக்கி விட்டது. விழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் குதிரை வளர்ப்போர் சிலர் குதிரைகளுக்கு உணவிட முடியாமல் அவற்றை சாலைகளில் விட்டுள்ளனர். நாள்தோறும் சில கிலோ புல்,தவிடு உண்ணும் குதிரைகள் உணவின்றி வயிறு காயும் நிலை ஏற்பட்டதால் அவை உணவு தேடி குப்பைத் தொட்டிகளில் மேய்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த குதிரைகளுக்கு உணவும், மருந்தும் அளிப்பதுடன், குதிரை வளர்ப்போருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News