செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வேன் மற்றும் குட்காவை படத்தில் காணலாம்.

கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.4¼ லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2020-08-12 08:03 GMT   |   Update On 2020-08-12 08:03 GMT
கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குருபரப்பள்ளி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வரப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி குருபரப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளி மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்அப் வேன் டிரைவர், போலீசாரை பார்த்த உடன், சற்று தொலைவில் வேனை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான குட்கா 65 அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குட்காவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குட்கா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். அப்போது அந்த வேன் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதில் குட்காவை கடத்தியவர்கள் குறித்தும் தப்பியோடிய வேன் டிரைவர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News