செய்திகள்
கலெக்டர் கோவிந்தராவ்

222 மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை- கலெக்டர் பேட்டி

Published On 2020-08-04 09:57 GMT   |   Update On 2020-08-04 09:57 GMT
தஞ்சை மாவட்டத்தில் 222 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது என்று, கலெக்டர் கூறினார்.
கும்பகோணம்:

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதி உள்ளவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வல்லம், பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் அன்னை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 76 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 222 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 23 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கும்பகோணத்தில் தற்போது வரை 599 கொரோனா நோயாளிகள் உள்ளனர். தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 439 பேர் இதுவரை நோய் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

தாராசுரம் பைபாஸ் பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன். தனியார் பள்ளி வளாகத்தில் மார்க்கெட் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். எனவே காய்கறி மார்க்கெட்டை 2 இடங்களில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கும்பகோணம் நகரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. அவை குறித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் பிரேமா, வருவாய் கோட்டாச்சியர் விஜயன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமு ஆகியோர் இருந்தனர்.
Tags:    

Similar News