செய்திகள்
தமிழக அரசு

ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ்

Published On 2020-07-24 07:47 GMT   |   Update On 2020-07-24 07:47 GMT
தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர். எனவே அவர்களுக்கு தினசரி 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு இ-பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும், தொழிற்சாலை நிர்வாகம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களை அழைத்து வர நிர்வாகமே வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த அளவே அனுமதி அளிக்கப்படும் எனவும், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் தினசரி ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல, மாதம் தோறும் இ-பாஸ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கான இ-பாஸ் பெறுவோர் ஒரு மாதம் முடிந்ததும் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News