செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட பிரியாணி

கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி- விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் வழங்கினர்

Published On 2020-07-20 10:15 GMT   |   Update On 2020-07-20 10:15 GMT
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 600 கொரோனா நோயாளிகளுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் பிரியாணி வழங்கினர்.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரதுறை மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் குணமடைந்து வீடு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய புரோட்டின் சத்துள்ள உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 600 கொரோனா நோயாளிகளுக்கு முட்டையுடன் கூடிய கோழிபிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி தயாரிக்கும் பணி சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் உள்ள ஒரு சமையல் கூடத்தில் நடந்தது.

அந்த சமையல் கூடத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் நேரடியாக சென்று பிரியாணி தயாரிக்கும் முறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பிரியாணி பார்சல்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சமையல் வல்லுனர்களிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம், தேரூர் பேரூர் கழக செயலாளர் வீரபத்திரபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News