செய்திகள்
உயிரிழந்த தங்கமணி

மின்கம்பம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி- மின்துறை அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-07-09 06:26 GMT   |   Update On 2020-07-09 07:03 GMT
வானூர் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானது தொடர்பாக மின்துறை அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானூர்:

வானூர் அருகே வி.பரங்கனி முதல் திருவக்கரை வரை சாலையோரம் உள்ள பழைய மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் செஞ்சியை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளிகள் தங்கமணி (வயது 24), பிரகாஷ் (22) ஆகியோர் புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தின் மீது ஏறி, உச்சியில் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து, கம்பம் முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். காயமடைந்த பிரகாஷ் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.

பணியின்போது விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்கக்கோரி தங்கமணியின் உடலை எடுக்கவிடாமல் சக தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் வானூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக மயிலம் மின் அலுவலக உதவி செயற்பொறியாளர் சசிதா, திருவக்கரை உதவி பொறியாளர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் நாகராஜன், முருகன், கமலநாதன் ஆகிய 5 பேர் மீது வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News