செய்திகள்
பொதுமக்கள் போராட்டம்

அவினாசி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-07-08 13:20 GMT   |   Update On 2020-07-08 13:20 GMT
அவினாசி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அவினாசி நியூடவுன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு நியூடவுன் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 140 வீட்டுமனைகள் உள்ளன. தற்போது அங்கு 60 குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள 60 சென்ட் பாதுகாக்கப்பட்ட நிலத்தை (ரிசர்வ் சைட்) தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை பேரூராட்சி நிர்வாகத்தினர் மீட்க வேண்டும் என்று அங்கு குடியிருப்புவாசிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டது. அதில் 60 சென்ட் பாதுகாக்கப்பட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட நிலத்தின் அருகில் குடியிருக்கும் நபர் கழிவுநீரை பூமிக்குள் இறக்குவதற்கு பாதுகாக்கப்பட்ட நிலத்தில் 60 அடி நீளத்திற்கு 6 அடி அகலத்தில் குழிதோண்டி ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் சுற்றுசுவர் கட்டியுள்ளார். எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடம் வந்து குடியிருப்புவாசிகளிடம் சமரசம் பேசி நில அளவையர் மூலம் நில அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அவினாசி நியூடவுன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News