செய்திகள்
தமிழக அரசு

மருத்துவ ஆய்வு குழுவின் முதற்கட்ட அறிக்கை அரசிடம் தாக்கல்

Published On 2020-07-06 01:50 GMT   |   Update On 2020-07-06 01:50 GMT
சென்னையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவு குளறுபடி விவகாரம் தொடர்பாக மருத்துவ ஆய்வு குழுவினரின் முதற்கட்ட அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை அன்றாடம் மாலையில் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு வாயிலாக வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே சுகாதாரத்துறை வெளியிட்ட இறப்பு விவரமும், பெருநகர சென்னை மாநகராட்சி பதிவு செய்திருந்த இறப்பு விவரத்திலும் வித்தியாசம் காணப்படுவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளில் மாறுபாடு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

எனவே தமிழகத்தில் கொரோனா குறித்த புள்ளி விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, இந்த குளறுபடி தொடர்பாக ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் வடிவேலு தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இந்த குழுவினர் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியின் கொரோனா பதிவு ஆவணங்களை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் முதற்கட்ட ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம், டாக்டர் வடிவேலு தலைமையிலான மருத்துவ ஆய்வு குழுவினர் நேற்று சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து அந்த ஆய்வு குழுவை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

உயிரிழப்புகள் குறித்த முதற்கட்ட ஆய்வு அறிக்கை அரசிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் மருத்துவ அறிக்கை குறித்த தகவல்கள் அனைத்தும் மருத்துவ குழுவினரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் உயிரிழப்பு கொரோனா நோய் தொற்றால் தான் ஏற்பட்டதா? என்பது உறுதி செய்யப்பட்டு, இறுதி அறிக்கை ஓரிரு நாளில் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News