செய்திகள்
அபராதம்

தர்மபுரியில் கிருமிநாசினி பயன்படுத்தாத 10 கடைகளுக்கு அபராதம்

Published On 2020-07-05 06:40 GMT   |   Update On 2020-07-05 06:40 GMT
தர்மபுரி மாவட்டத்தில் கிருமிநாசினி பயன்படுத்தாத 10 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராமமூர்த்தி மேற்பார்வையில், தனி தாசில்தார் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடை, வாகன விற்பனை நிலையம், பழக்கடை ரத்த பரிசோதனை நிலையம் ஆகியவற்றில் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பது தெரியவந்தது. இதேபோல் நகர பகுதியில் 6 கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கிருமி நாசினி பயன்படுத்தாமலும் விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக 10 கடைகளுக்கும் அதிகாரிகள் தலா ரூ.500 அபராதம் விதித்தனர். இதேபோல் தர்மபுரி பகுதியில் நேதாஜி பைாஸ் சாலை, கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். தர்மபுரி நகர பகுதியில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் என 113 பேருக்கு அதிகாரிகள் தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News