செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் மீண்டும் முழு ஊரடங்கா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

Published On 2020-06-20 10:46 GMT   |   Update On 2020-06-20 10:46 GMT
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மதுரையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
மதுரை:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் மற்றும் புராதன நடைபாதை அமைக்கும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியில் ரூ.900 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கிறது. அதில் நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் மையம் மற்றும் பாரம்பரிய நடைபாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெரியார் பஸ் நிலையம் ரூ.160 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தின் முதல் கட்ட பணிகளை செப்டம்பர் மாதத்திற்கு முடித்து பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலைய முழு பணிகளும் அடுத்த ஆண்டு(2021) மார்ச் மாத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் சிறப்பாக செய்து வருகிறது. இருப்பினும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வரும் நாட்களில் மதுரையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதனை அரசால் அமைக்கப்பட்டு நிபுணர்கள் குழு அறிக்கை தரும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தி.மு.க. அரசியல் செய்வது கேவலமானது. அரசு செய்யும் பல நலத்திட்ட பணிகள், நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அதனை எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பார்கள். டி.ஆர்.பாலு மத்திய தரை வழிப்போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த போது தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி, ஆங்கிலத்தில் பெயர் எழுதினார்கள். இதுகுறித்து கேட்டதற்கு, வடமாநிலத்தில் இருந்து வருபவர்கள் படிக்க வேண்டாமா என்றனர்.

வைகை ஆற்றின் ஏ.வி.மேம்பாலத்தில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்றதால் கோடை காலமான தற்போதும் தெப்பக்குளத்தில் முழு அளவில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் நகர் பொறியாளர் அரசு. இவர்கள் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு மதுரை மக்கள் சார்பாக எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News