செய்திகள்
யானைகள்

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்- வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை

Published On 2020-06-12 12:23 GMT   |   Update On 2020-06-12 12:23 GMT
புல்லாவெளி பகுதியில் காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பெரும்பாறை:

பெரும்பாறை அருகே புல்லாவெளி, நேர்மலை, புலையன் வளவு, கூட்டுக்காடு, ஆத்துக்காடு, எட்டுவீடு, தடியன்குடிசை உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் யானைகள், அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, காபி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

மேலும் தோட்டங்களில் உள்ள வீடுகளையும் அவை சூறையாடி வருகின்றன. இந்த பகுதியில் 3 குட்டிகள் உள்பட 8 யானைகள் கடந்த 1 மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளன. தற்போது புல்லாவெளி பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், அவை முகாமிட்டு பழங்களை சுவைத்து வருகின்றன. யானைகள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது.

எனவே புல்லாவெளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாவட்ட வன அலுவலர் வித்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் செம்பட்டி பிரிவு வனவர் அப்துல் ரகுமான் வனக்காப்பாளர் சங்கர் மற்றும் வனகாவலர்கள் புகைபோட்டும், பட்டாசு வெடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News