செய்திகள்
தமிழக அரசு

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2020-06-12 07:09 GMT   |   Update On 2020-06-12 07:09 GMT
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கை விசாரிக்க தொடங்கிய நீதிபதிகள், கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேள்வி எழுப்புவதாக நீதிபதிகள் வினீத் கோத்தரி, ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது:-

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தியே. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையிலே அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியது. 

தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News