செய்திகள்
ஜெ.அன்பழகன் எம்எல்ஏ

பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்- சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்

Published On 2020-06-10 03:33 GMT   |   Update On 2020-06-10 03:33 GMT
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. இதன்மூலம் முதல் முறையாக எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.



அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் கால்பதித்தவர் ஜெ.அன்பழகன். அரசியல் பணிகளுக்கு மத்தியில் திரைப்பட விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

ஆதரவாளர்களை அன்புடன் அரவணைத்து செல்லும் குணம்  கொண்ட அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள். எப்படியும் அவர் குணமடைந்துவிடுவார், பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என உறவினர்களும், ஆதரவாளர்களும் நினைத்திருந்தனர். ஆனால், பிறந்தநாளான இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மறைவு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News