செய்திகள்
ரப்பர் பால் வெட்டும் தொழில்

தென்மேற்கு பருவமழை- ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியது

Published On 2020-06-09 14:47 GMT   |   Update On 2020-06-09 14:47 GMT
தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால், ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியது.
குலசேகரம்:

தமிழ்நாட்டிலேயே ரப்பர் உற்பத்தியாகும் ஒரே மாவட்டம் குமரி ஆகும். இங்கு கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களிலும், தோவாளை தாலுகாவின் ஒரு பகுதியிலும் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது.

அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் மருதம்பாறை, சிற்றாறு, மயிலாறு, குற்றியாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ளன. தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும் ஏராளமாக உள்ளன. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் ஹெக்டேர் நில பரப்பில் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ரப்பர் மரத்தில் இருந்து பால் வெட்டும் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பால் வெட்டும் தொழிலில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் முடங்கி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News