செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆண்டிப்பட்டி அருகே பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-09 12:26 GMT   |   Update On 2020-06-09 12:26 GMT
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் இன்று விவசாயிகள் பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்கள் தங்களிடம் உள்ள பாலை மதுரை ஆவினுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் அனுப்பி வருகின்றனர்.

தினசரி 240 லிட்டர் கொண்ட பாலை 6 கேன்களில் அனுப்புகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாலை குறைவாக அனுப்புமாறு நிர்வாகம் விவசாயிகளிடம் தெரிவித்து இருந்தது. அதன்படி குறைவாக அனுப்பப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தனியாரிடம் பாலை பெற்றுக் கொண்டு உறுப்பினராக உள்ள தங்களிடம் பாலை வாங்க மறுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் அனுப்பிய 120 லிட்டர் பாலை நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர். கெட்டுப்போன பாலை அனுப்பியதால் அதனை தங்களால் பெற்றுக் கொள்ளமுடியவில்லை என தெரிவித்தனர்.

தனியாரிடம் பாலை பெற்றுக் கொண்டு உறுப்பினராக உள்ள தங்களிடம் பாலை வாங்க நிர்வாகம் மறுப்பதாக கூறி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 120 லிட்டர் பாலை தரையில் கொட்டி கோ‌ஷம் எழுப்பினர். இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News