செய்திகள்
வானிலை நிலவரம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2020-06-09 08:57 GMT   |   Update On 2020-06-09 08:57 GMT
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்,  இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

ஜூன் 9 முதல் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் ஜூன் 11 மற்றும் ஜூன் 12ம் தேதியில் லட்சத் தீவு மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று விசக்கூடும்.

ஜூன் 13 அன்று கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதியில் 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
Tags:    

Similar News