செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா

Published On 2020-06-04 08:00 GMT   |   Update On 2020-06-04 08:00 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நுரையீரல் சிகிச்சை பிரிவில் சாத்தமங்கலத்தை சேர்ந்த 26 வயது டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அந்த சிகிச்சை பிரிவில்தான் ஆஸ்பத்திரிக்கு கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு முதலில் பரிசோதனை செய்யப்படுகிறது.

எனவே அங்கு பணிபுரிந்த அந்த டாக்டருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதே போல் எல்லீஸ் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர், சோலையழகுபுரத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர், செல்லூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண், 73 வயது முதியவர், மேலூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண், ஆலத்தூரைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் 7 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி சீல் வைத்து அடைக்கப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 45 வயது ஆண், செல்லூரைச் சேர்ந்த 47 வயது ஆண், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது ஆண் என 4 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள்.

அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News