செய்திகள்
யானை

புல்லாவெளியில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்

Published On 2020-06-03 12:51 GMT   |   Update On 2020-06-03 12:51 GMT
புல்லாவெளியில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 20-க்கு மேற்பட்ட யானைகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுற்றி வருகின்றன. இவை அடிக்கடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதோடு மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுதி வருகின்றன.

தற்போது 8 யானைகள் கன்னிவாடி வனப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. சித்தையன்கோட்டை பீட்டுக்கு உட்பட்ட செல்வம்பாறை பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் பட்டா காடுகள் உள்ளது. இங்கு காப்பி, மிளகு, வாழை, பலா, பாக்கு, ஆரஞ்சு உள்ளிட்டவை விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலா மரங்களும் உள்ளன. இந்த பலா வாசனையை நோட்டமிட்ட யானைகள் அருகிலேயே தங்கி உள்ளே நுழைவதற்காக தயார் நிலையில் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பலாப்பழம் அறுவடை செய்து கேரளாவுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

யானைகள் உள்ளே நுழையாமல் இருக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னிவாடி மற்றும் ஒட்டன்சத்திரம் சரகத்திற்குட்பட்ட வன பணியாளர்கள் கொண்ட தனிக்குழு உருவாக்கப்பட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் யானைகள் அவ்வப்போது தோட்டங்கள் அருகே வந்து பின்னர் மீண்டும் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. பட்டாசு வெடித்தும், புகை போட்டும், நெருப்பு மூட்டியும் கிராம மக்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போது 8 யானைகள் அங்கு முகாமிட்டிருப்பதாகவும் அதனை விரட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News