செய்திகள்
இந்திய கரன்சி

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் வங்கி ஊழியருக்கு தொடர்பா?

Published On 2020-06-01 06:57 GMT   |   Update On 2020-06-01 07:31 GMT
மதுரவாயல் ஏடிஎம் மையத்தில் ரூ.8½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் சிலரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
போரூர்:

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி 2-வது மெயின் ரோட்டில் தனியார் வங்கி கிளை அலுவலகம் உள்ளது. இதன் முன்பு ஏ.டி.எ.ம் மையம் செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் கிருமி நாசினி தெளிப்பதாக கூறினார். பின்னர் அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் டிஜிட்டல் பின் நம்பரை பதிவு செய்து திறந்து அதிலிருந்த ரூ.8 லட்சத்து 61 ஆயிரத்து 900-யை பையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆட்டோவில் தப்பி சென்று விட்டார்.

இதன் பின்னரே இது கொள்ளை என்பது தெரிந்தது. ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இருக்கும்போதே இந்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ் ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் தொப்பி, முகக்கவசம் அணிந்தபடி முதுகில் பையை மாட்டிக்கொண்டு ‘டிப் டாப்’பாக ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பணத்தை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது.

மர்ம நபர் எந்திரத்தை திறக்கும்போது அருகில் உள்ள மற்றொரு எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணம் எடுத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் யாருக்கும் சந்தேகம் வராதது போல் வங்கி ஊழியர் போலவே நடித்து மர்ம நபர் கைவரிசை காட்டி உள்ளார்.

கொள்ளை நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் மொத்தம் ரூ. 17 லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் எடுத்தது போக மீதியிருந்த ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

கடைசி நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் வாடிக்கையாளர் ஒருவர் வந்ததால் எந்திரத்தில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுக்காமலேயே அவர் தப்பி சென்று இருக்கிறார். இதனால் அந்த பணம் தப்பியது.

கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் வந்து சென்ற ஆட்டோ எண் சரியாக பதிவாகவில்லை. பூந்தமல்லியை நோக்கி அந்த ஆட்டோ சென்றுள்ளதால் அந்த பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்

இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சிலரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News