செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சரக்கு லாரியில் தப்பி வந்த என்ஜினீயருக்கு கொரோனா- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-05-26 15:21 GMT   |   Update On 2020-05-26 15:21 GMT
மும்பையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு சரக்கு லாரியில் தப்பி வந்த என்ஜினீயருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழித்துறை:

களியக்காவிளையை அடுத்த முளங்குழி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மும்பையில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

கொரோனா பிரச்சினையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இவர் மும்பையில் இருந்து ஊருக்கு வரமுடியாமல் தவித்தார். 50 நாட்களுக்கு மேல் அவதிப்பட்டு வந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து கிடைத்த வாகனங்களில் ஏறி சென்னை வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து ஒரு சரக்கு லாரியில் ஏறி இரண்டு நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் வந்தார். அங்கிருந்து நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் முளங்குழி சென்றடைந்தார்.

மும்பையில் இருந்து முளங்குழி வந்த வாலிபர் பற்றி முன்சிறை சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் முளங்குழி விரைந்தனர்.

அங்கு வாலிபரை கண்டுபிடித்து அவருக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மும்பை வாலிபரை அழைத்து வந்த அவரது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரையும் பரிசோதிக்க சுகாதார துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது பற்றி வருவாய் துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கூறும்போது, முளங்குழி வாலிபருக்கு கொரோனா உறுதி ஆனதும் அவர் வசித்த பகுதிகளில் உள்ளோருக்கும் சோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் முளங்குழியில் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் முடிவு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார துறையினருடன் இணைந்து அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News