செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவில் யானை

திருப்பரங்குன்றம் கோவில் யானையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள்

Published On 2020-05-26 13:46 GMT   |   Update On 2020-05-26 13:46 GMT
திருப்பரங்குன்றம் கோவில் யானை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்:

முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை தெய்வானையை நேற்று முன்தினம் குளிக்க அழைத்து சென்றபோது திடீரென ஆவேசமடைந்தது. அப்போது அந்தயானை, பாகன் காளிதாசை தும்பிக்கையால் தாக்கி சுவற்றில் அடித்து கொன்றது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவில் தக்கார் நடராஜன், துணை ஆணையர் ராமசாமி ஆகியோர் கோவிலில் விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சரவணன் தலைமையில் கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

அதன்பின்னர் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது யானையை பிற கோவிலை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர். வழக்கம் போல் பாகன்களை கொண்டு யானையை குளிக்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானைக்கு கருப்பட்டி, கரும்பு, உருண்டை சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை யானை விரும்பி சாப்பிட்டது.

வழக்கமாக திருப்பரங்குன்றம் கோவில் யானை மண்டபத்தில் ஓய்வெடுக்கும். பாகன் கொல்லப்பட்ட பின்பு தெய்வானை யானை சஷ்டி மண்டபத்தின் முன்புள்ள மரத்தில் பாதுகாப்புடன் கட்டி வைக்கப்பட்டு அங்கு வைக்கோல் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. மர நிழலில் தற்போது யானை ஓய்வெடுத்து வருகிறது. யானை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News