செய்திகள்
காய்கறிகள்

காய்கறி கடைகளை மீண்டும் கடைவீதிக்கு இடம் மாற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-05-22 09:35 GMT   |   Update On 2020-05-22 09:35 GMT
பேராவூரணியில் காய்கறி கடைகளை மீண்டும் கடைவீதிக்கு இடம் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பகுதியில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு காய்கறிக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

தற்போது 60 நாட்களைக் கடந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடைவீதியில் மளிகை, ஜவுளி, தேநீர், உணவகம், இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, அரசு விதிமுறைகளுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், காய்கறிக் கடைகள் மட்டும் தொடர்ந்து, நகருக்கு வெளியே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலேயே இயங்கி வருகிறது. இதனால் நகரை விட்டு 3 கி.மீ தூரம் சென்று காய்கறி வாங்க உள்ளது. மேலும் அங்கு கழிப்பறைகள் இல்லாததால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், விளையாட்டு மைதானத்தில் காய்கறி வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டகை அமைப்பதற்காக குழி தோண்டி, மைதானத்தை சேதப்படுத்தி இருப்பதாகவும், காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி முன்பாக சாலையின் இருபக்கமும் மீன் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மைதானத்தில் தினமும் ஆண்கள், பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். காய்கறிக் கடைகள் அங்கேயே தொடர்ந்து இயங்குவதால் நடைபயிற்சி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, பள்ளி மைதானத்தில் இருந்து காய்கறிக் கடைகள் மற்றும் மீன்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, விளையாட்டு திடலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News