செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

உம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published On 2020-05-18 20:37 GMT   |   Update On 2020-05-18 20:37 GMT
உம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்பதால், அதற்கு ஏற்றாற்போல நிவாரண முகாம்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி வருவாய் நிர்வாக கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

உம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வட மேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தை கடக்கும் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.

எனவே மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) தெற்கு, மத்திய வங்காள விரிகுடாவுக்கு செல்ல வேண்டாம் என்றும், 20-ந்தேதி (நாளை) வரை வடக்கு வங்காள விரிகுடாவுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து புயலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

நீர் மேலாண்மையில் குடிமராமத்து என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து 14 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. மக்களின் நலன்களுக்காக, இரவு, பகலாக தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பான மனநிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மழைக்காலங்களில் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே அதிகமாக குறிப்பாக, மராட்டியத்தை விடவும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகின்றன.

சென்னையில் 10 ஆயிரம் பேர் வரையில் ஒரு நாளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொடர்பாக யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா ஒழிப்பு பணியை போன்று, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைவரும் இணைந்து செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News