செய்திகள்
வைகோ

செவிலியர்களை கவுரவிக்க வேண்டும்- மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

Published On 2020-05-12 08:58 GMT   |   Update On 2020-05-12 08:58 GMT
கொரோனா நோயாளிகளை கவனிக்கும் செவிலியர்களை கவுரவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத்தன்மையும் கொண்டு மனிதநேயத்துடன் மகத்தான சேவை ஆற்றுபவர்கள் செவிலியர்கள். இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர், இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820-ம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேலையும் இணைத்து ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.

‘‘அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது’’ என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, செவிலியர் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார். புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில், தற்போது கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பரிவோடு கவனித்து தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை மத்திய, மாநில அரசுகள் கவுரவிக்க வேண்டும். புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அனைவருக்கும் உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News