செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து... மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு

Published On 2020-05-08 10:02 GMT   |   Update On 2020-05-08 10:02 GMT
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள்.



மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி, ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்.

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் ஒரு மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநில ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடலாம். 

புதிய மின்சார சட்டத்திருத்தம் கலைஞர் கொண்டு வந்த விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். 

உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டண உயர்வு, மின்வாரியத்திற்கு மீண்டும் இழப்பு, இலவச மின்சாரத்திற்கு ஆபத்து என்று பல்வேறு நெருக்கடிகளை தமிழகம் அனுபவித்து வருகிறது. 

அதிமுக அரசு காயம் ஏற்படாமல் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எப்போதும் செய்வதைப்போல் இப்போதும், ஆமாம் சாமி போட்டு நழுவிவிடாமல் இந்த கருப்புச் சட்டத்தை கடுமையாக எதிர்த்திட வேண்டும். மாநிலங்களின் அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்வதன் தொடர்ச்சியான இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News