செய்திகள்
ஜாக்டோ-ஜியோ

அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கண்டனம்

Published On 2020-04-28 09:54 GMT   |   Update On 2020-04-28 09:54 GMT
மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய-மாநில அரசுகள் அதிக நிதியை செலவழித்து வருகின்றன. இதனால் ஒருசில செலவுகளை குறைத்து மத்திய-மாநில அரசுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ரூ. 4,950 கோடி சேமிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு உள்ள இக்கட்டான சூழலில் போராடி பெற்ற உரிமையான சரண் விடுப்பை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுபோதாது என்று வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படியை நிறுத்தியதை கண்டிக்கிறோம்.

இதற்கான அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News