செய்திகள்
கைது

மத்தூர், காரிமங்கலம், இண்டூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற 6 பேர் கைது

Published On 2020-04-24 11:31 GMT   |   Update On 2020-04-24 11:31 GMT
மத்தூர், காரிமங்கலம், இண்டூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மளிகைக் கடையில் கள்ளசாராயம் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப் படை போலீசார் மத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மூக்கா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது58) என்பவர் கள்ளத்தனமாக தனது மளிகைக்கடையில் 9 லிட்டர் சாராயம் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கள்ளச் சாராயம் பதுக்கி விற்றதாக பெருமாளை மத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சோபாதேவி கைது செய்தார். கைதான போச்சம்பள்ளி கோர்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள தூக்கனாம் பள்ளம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக ராமன், முனுசாமி, மாரியப்பன், ஆட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த சாம்ராஜ்சாதிக் ஆகிய 4 பேரை இண்டூர் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

காரிமங்கலம் -பாலக்கோடு சாலையில் புளியந்தோப்பு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமான புளியந்தோப்பு பகுதியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருந்த சீகல அள்ளியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது32) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News